Monday 5 September 2011

ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கு வாரிசுதாரர் நியமனம் செய்வதற்கான கேள்வி பதில்கள்.

ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கு வாரிசுதாரர் நியமனம் செய்வதற்கான கேள்வி பதில்கள்.

ஒரு ஆயுள் காப்பீட்டு பாலிசியினை எடுக்கும்பொழுது, வாரிசுதாரரை கட்டாயமாக நியமிக்க வேண்டும்.  வாரிசுதாரர் என்பவர் யார்? பாலிசிதாரர் வாரிசுதாரரை நியமனம் செய்யும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன என்பது குறித்த வினாக்களுக்கு கீழ்க்கண்ட பதில்கள் ஒரு தெளிவை கொடுக்கும்.

1) வாரிசுதாரர் என்பவர் யார்?
     வாரிசுதாரர் என்பவர், ஒரு ஆயுள் காப்பீட்டு பாலிசிதாரர் ஒருவேளை எதிர்பாராத விதமாக இறந்து விட்டால் அவருக்கு சேரவேண்டிய பணப் பயன்களை பெறுபவர் ஆவார்.  வாரிசுதாரர் என்பவர் கட்டாயமாக பாலிசிதாரரின் பணப் பலன்களை அனுபவிக்கும் உரிமை பெற்றவராக இருக்க வேண்டியதில்லை.  அவர் அப்பணப் பலன்களுக்கு ஒரு காப்புறுதியாளராக மட்டுமே (டிரஸ்டி) உள்ளவர். அதாவது வாரிசுதாரர் நியமனம் என்பது ஒரு பாதுகாப்பிற்காக மட்டுமெயன்றி, நிஜ பலன்களை பாலிசிதாரரின் நேரடி உரிமை பெற்ற வாரிசுதார்களுக்கு பிரித்து தரப்பட வேண்டும்.  வாரிசுதாரர் பாலிசிதாரரின் நேரடி உரிமை பெற்ற உறவினர் என்றால், அவர் அவருக்குரிய விகிதாச்சார பண பலனை எடுத்துக் கொண்டு மற்றவர்களுக்கு உரிய பங்கினை தற்போதைய வாரிசு சட்டப் படி பிரித்து கொடுக்க வேண்டும்.

      பாலிசி எடுக்கும் போதே வாரிசுதாரை நியமித்தல் நலம். இல்லையெனினும் பிற்காலத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.

2) எனது குடும்ப உறுப்பினர்களை மட்டுமே நான் வாரிசுதாரராக நியமிக்க முடியுமா?
      பாலிசியின் பணப்பலன்கள் என்பது பாலிசிதாரர் உயிரோடு இல்லாதபோது, அவர்களை சார்ந்து உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு நிதி பாதுகாப்பு கொடுப்பதற்காகவே பரிந்துரைக்கப் படுகிறது.  ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் பொதுவாகவே, தனது ரத்த சொந்த குடும்ப உறுப்பினர்களை (துணைவன்/துணைவி மற்றும் குழந்தைகள்) மட்டும் வாரிசுதாரராக நியமிப்பதற்கு முன்னுரிமை அளிக்கிறது.  எனினும் மற்ற உறுப்பினர்களையும் வாரிசுதாரராக நியமித்துக் கொள்ளலாம். ஆனால் அவர் பணப்பலன்கள் பெறுவதற்கு தகுதியானவர், மற்றும் ஆயுள் காப்பீட்டுதாரர் இல்லாததால் அவ்வாரிசுக்கு பண இழப்பீடும், வாழ்க்கை இழப்பீட்டும் ஏற்படும் என்பதை நிரூபிக்க வேண்டும்.

3) எனது குழந்தையை (மைனர்) வாரிசுதாரராக நியமிக்க நான் என்ன செய்ய வேண்டும்?
      உங்களது பாலிசிக்கு மைனர் குழந்தையை வாரிசிதாரராக நியமிக்க விரும்பினால், அவருக்கு மற்றுமொரு நபரை கார்டியனாக (காப்பாளர்) நியமிக்க வேண்டும்.  அக்குழந்தையின் பிறந்த தேதி, காப்பாளரின் பெயர், அவர் குழந்தைக்கு என்ன சொந்தம் என்பதையும் முன்மொழிவு படிவத்தில் குறிப்பிட்டு, அவர் காப்பாளராக இருப்பதற்கு, சம்மதம் தெரிவித்து கையொப்பமும் இடவேண்டும்.

4) வாரிசுதாரரை தேர்வு செய்வது எப்படி?  அதற்கு என்ன விபரங்கள் தெரிவிக்கப் பட வேண்டும்?
      பாலிசி பெற முன்மொழிவுப் படிவம் சமர்ப்பிக்கும் பொழுதே, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் வாரிசுதாரரை நியமனம் செய்ய தேவையான படிவங்களையும் கொடுத்து பூர்த்தி செய்து தருமாறு கேட்கும். அப்படிவத்தில்  கேட்கப் பட்ட விபரங்களை பூர்த்தி செய்து தர வேண்டும். அவையாவன: வாரிசுதாரரின் பெயர், வயது, முகவரி, பாலிசிதாரருக்கும், வாரிசுதாரருக்கும் உள்ள உறவு முறை ஆகியவையாகும்.  (வாரிசுதாரருக்கு வேறு பெயர் வைத்து கூப்பிடும் வழக்கம் உண்டு என்றால் அதனையும் மறக்காமல் குறிப்பிட வேண்டும், இது குடும்பப் பெயர்களை இணைத்து வரும் குடும்பத்தில் குழப்பங்களை தவிர்ப்பதற்காக).

5) ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களை வாரிசுதாரர்களாக நியமனம் செய்யலாமா?
      செய்யலாம்.  ஒன்றுக்கு மேற்பட்ட உங்கள் குடும்ப உறுப்பினர்களை வாரிசுதாரர்களாக நியமன்ம் செய்யும் பட்சத்தில், அவர்களது உறவு முறையினையும், அவர்களுக்கு சேரவேண்டிய பணத்தினை விகிதாச்சார அடிப்படையிலும் குறிப்பிடுவது முன்மொழிவு படிவத்தில் குறிப்பிடுவது நல்லது.

6) வாரிசுதாரரை இடையில் மாற்ற முடியுமா?
      மாற்ற முடியும்.  வாரிசுதாரரை பாலிசி முடிவுக்காலம் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றலாம்.  இவ்வாறு மாற்றுவதற்கு “ வாரிசுதாரர் நியமன மாற்றுபடிவத்தினை பூர்த்தி செய்து கொடுத்து  அந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் மாற்றம் செய்து கொள்ளலாம்.  இவ்வாறு செய்வதற்காக, முதலில் நியமனம் செய்தவருக்கு முன்னறிவிப்பு எதுவும் கொடுக்க தேவையில்லை. மேலும் முன்னால் நியமிக்கப் பட்ட வாரிசுதாரர் இதில் உரிமை ஏதும் கோரவும் முடியாது.

7) நான் வாரிசுதாரரை நியமிக்கவில்லை என்றால் என்னவாகும்?
      வாரிசுதாரர் நியமனம் செய்யப்படவில்லையெனில், தற்பொழுது நடைமுறையில் உள்ள நேரடி உரிமையுள்ள வாரிசுதாரர் உரிமை சட்டம் (Personal laws of succession) அமல்படுத்தப் படும்.

8) உயில் ஏதும் எழுதப்பட்டிருந்தால், பாலிசிதாரரின் பணப்பலன்கள் யாரை சென்றடையும்?
      உயில் ஏதேனும் எழுதப் பட்டிருந்தால், உயிலின் படியே பாலிசிதாரரின் பணப்பலன்கள் கொடுக்கப்படும். அப்போது வாரிசுதாரர் நியமனம் கொடுக்கப்பட்டிருப்பினும், அது செல்லாது.  ஏற்கனவே சொன்னபடி, வாரிசுதாரர் என்பவர் ஒரு காப்பாளரே தவிர, அவர் ஆயுள் காப்பீட்டு பாலிசிதாரரின் வாரிசு உரிமை பெற்றவர் அல்லர்.
9) உயில் ஏதேனும் எழுதப் படாமல் இருப்பினும், உரிமையுள்ள நேரடி வாரிசுதாரர் பாலிசி பணப்பலன்களை கோர முடியுமா?
      முடியும். உரிமையுள்ள வாரிசுதாரர் அவரது உரிமையினை நிரூபித்து பணப்பலன்களை பெற்றுக் கொள்ளலாம். ஏனெனில், நியமன வாரிசுதாரர் என்பவர் ஒரு காப்பாளரே தவிர, அவர் ஆயுள் காப்பீட்டு பாலிசிதாரரின் வாரிசு உரிமை பெற்றவர் அல்லர்.

10) வாரிசுதாரரின் உரிமைகள் என்ன?
      வாரிசுதாரர் என்பவர், பாலிசிதாரரின் இறப்பிற்கு பின்னர் அவரது பணப்பலன்களை பெறும் உரிமை மட்டுமே பெறுகிறார்.  பாலிசிதாரர் உயிரோடு இருந்து முதிர்வு கால பலன்களை பெறும் பட்சத்தில், வாரிசுதாரர் நியமனம் காலாவதியாகி விடும்.  வாரிசுதாரர் ஒரு காப்பாளராக மட்டுமே பணப்பலன்களை பெறுகிறார்.  அவர் ஒரு வேளை பாலிசிதாரரின் நேரடி வாரிசு, மற்றும் பணப்பலன்களை அடைவதற்கு உரியவர் என்றால் மட்டுமே, அவருக்கு அந்த பலன்களோ அல்லது ஒரு விகிதாச்சாரமோ கிடைக்கும்.

IRDA Grievance call centre
Toll free number : 155255
    

No comments:

Post a Comment